மேற்கு ஊடகப் பயங்கரவாதம் பற்றி ஜோன் பிராட்லி
மேற்கு ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளரும் சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான ஜோன் பிராட்லி என்ற ஊடகவியலாளர் மேற்கு ஊடகத்துறை பற்றி இப்படி கூறுகின்றார்
அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலைத் தாங்கிப்பிடிப்பவை -There is no doubt the American media is deeply pro-Israeli- இஸ்ரேல் நாட்டினுள் உள்ள ஊடகங்கள் இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பதை விட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரானவற்றைப் பேசுவது மிகமிகக் குறைவு. CNN மற்றும் BBC போன்ற ஊடகங்கள் அளிக்கும் செய்திகளையும் ஆய்வுகளையும் சில நிமிடங்கள் நடுநிலைப் பார்வையோடு கவனித்தோமானால் அதில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுத் தன்மை விளங்கும்.
அமெரிக்க ஊடகங்களில் அரபுலக சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான ‘சிறப்புப் பார்வை’ நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். காஸா , மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் “Occupied” அல்லது “Occupation” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு “Contested அல்லது Disputed” போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் பலஸ்தீனின் அப்பகுதிகளையே “இஸ்ரேல்” என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.
இஸ்ரேல், லெபனான் மீது தொடுத்த போரின் உண்மைக் காரணிகளை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? இரு இஸ்ரேலியப் படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் பிடித்துச் சென்றது மட்டும் காண்பிக்கப்பட்ட ஊடகத்தில் அந்த இரு வீரர்கள் லெபனான் எல்லைக்குள் என்ன செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர் என்பது பூசி மெழுகி மறக்கப்பட்டு விட்டது. இரு வீரர்கள் பிணைக்கைதிகளானது போர்க்காரணம் என்றால் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பெண்களும் அடங்கிய 9000 பேர் இஸ்ரேலியச் சிறையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் படும் வேதனைகளை யார் வெளியே சொல்வது? அவர்களை யார் விடுவிப்பது?


